தேசிய செய்திகள்
நாடு தழுவிய ரத்த தான இயக்கம்; 1 லட்சத்தைக் கடந்த கொடையாளர்கள் எண்ணிக்கை - மன்சுக் மாண்டவியா தகவல்
தேசிய செய்திகள்

நாடு தழுவிய ரத்த தான இயக்கம்; 1 லட்சத்தைக் கடந்த கொடையாளர்கள் எண்ணிக்கை - மன்சுக் மாண்டவியா தகவல்

தினத்தந்தி
|
18 Sept 2022 4:20 AM IST

நாடு தழுவிய ரத்த தானம் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் செய்த கொடையாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்றைய தினம் 'ராக்தான் அம்ரித் மகோத்வ்' என்ற பெயரில் தேசிய அளவிலான ரத்த தான இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதி என்றும், நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய அனைத்து குடிமக்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ரத்த தானம் செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 6,112 ரத்த தான முகாம்களில் நேரடியாக சென்று ரத்த தானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'இ-ரக்த் கோஷ்' என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவும் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு தழுவிய ரத்த தான இயக்கத்தின் மூலம் இதுவரை ரத்த தானம் செய்த கொடையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் 'ராக்தான் அம்ரித் மகோத்வ்' ரத்த தான இயக்கத்தின் மூலம், நாடு முழுவதும் இதுவரை 1,00,506 பேர் ரத்த தானம் செய்துள்ளதாகவும், ரத்த தானம் செய்தவற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2,07,313 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்